Sunday, January 22, 2012

மனச்சோர்வுக்கு ஆளாக்கப் படும் குழந்தைகள்!


ஆங்கிலத்தில் ஒரு சொல். Depression.
இதற்கு ஆங்கிலத்தில் இப்படி பொருள் கொள்கிறார்கள்: “The state of feeling very sad (and anxious) and without any hope.
தமிழில் இதனை – “ஆழ்ந்த கவலையில் மூழ்கியிருக்கும் நிலை” என மொழி பெயர்க்கலாம்.
அந்தக் கவலைக்குக் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு விடிவு தெரியாத நிலையில் விரக்தியும் சோகமும் நிலை கொள்வதால் இதனை மனச் சோர்வு என்றும் பொருள் கொள்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஆழ்ந்த கவலை எதனால் ஏற்படுகின்றது, இந்நிலை ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன என்பதை ஆய்வதற்கு முன்பு சில தகவல்கள்…
இந்த ஆழ்ந்த கவலை என்பது நவீன உலகம் நமக்களித்த “பரிசு” என்றால் அது மிகையில்லை!
நமது இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டை – “The Age of Meloncholy” – அதாவது மனிதர்களை விரக்திக்கு இட்டுச் செல்லும் காலம் என்று வர்ணிக்கிறார்கள். (கடந்த இருபதாம் நூற்றாண்டை – “The Age of Anxiety” - அதாவது பதற்றத்தின் காலம் என்று வர்ணித்தார்களாம்.)
நவீன வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்த எல்லா நாட்டு மக்களையும் தொற்றிக் கொண்டிருக்கின்ற ஒரு நோய் தான் இது!
கட்டுக்கோப்பான, கட்டுப்பாடான குடும்ப அமைப்பு சிதறிப் போனமை,
அதிகரித்துக் கொண்டே செல்கின்ற திருமண முறிவுகள்.
குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் அலட்சியம்;
வேலைப் பளுவின் காரணம் காட்டி – குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்காமை.
இறை நம்பிக்கையின் அடிப்படையில் வாழத் தவறியமை.
மற்றவர்களைப் பற்றிய அக்கரையற்ற சமூகச் சூழல்.
மனதுக்கு ஆறுதல் அளிக்க என்று எந்த ஒரு அமைப்பும் இல்லாத நிலை.
இப்படிப்பட்ட காரணங்களாலேயே குழந்தைகள் சோக மயம் ஆகிறார்கள்.
இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் – இந்த ஆழ்ந்த கவலை தொற்றிக் கொள்கின்ற வயது என்ன தெரியுமா? பத்து வயதிலிருந்து பதிமூன்று வயதுக்குள்! அதாவது நமது சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும்.
கவலைப் படுவது என்பது வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு அம்சம் தானே – இதற்குப் போய் ஏன் கவலைப் படுகிறீர்கள் என்று கேட்கப் படலாம்.
சின்னச் சின்னப் பிரச்னைகள் ஏற்படுவதும், அது பற்றிக் கவலைப் படுவதும், பின்னர் பிரச்னை தீர்ந்து விட்டால் அதிலிருந்து விடுபட்டு விடுவதும், வாழ்க்கையின் யதார்த்தமே.
ஆனால் நாம் இங்கே சொல்ல வருவது ஆழ்ந்த கவலை குறித்து. அதுவும் சிறிய வயதிலேயே தொற்றிக் கொள்கின்ற ஒரு எதிர்மறை மன நிலை குறித்து.
சிறு வயதிலேயே ஆழ்ந்த கவலைக்கு ஆட்பட்டு விடுபவர்கள் தான் – பின்னாட்களில் மனச் சோர்வாளர்களாக ஆகி விடுகிறார்கள் என்பதும் ஆய்வுகள் தெரிவிக்கும் செய்தியாகும்.
அப்படியானால் இந்த Depression குறித்து நாம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
குழந்தைகளுக்கு கவலை எப்படி ஏற்படுகிறது?
குறிப்பாக இரண்டு சூழல்களில் தான் குழந்தைகள் கவலைக்கு ஆளாகிறார்கள்:
ஒன்று: தன் முயற்சியில் தோல்வி அடைந்திடும் போது.
ஒரு காரியத்தில் இறங்குகிறான் ஒரு சிறுவன். அதில் தோல்வி அடைகின்றான். அல்லது ஒன்றை அடைந்திட முயற்சி செய்கின்றான். அது அவனுக்கு கிட்டிடவில்லை. அடுத்து என்ன செய்தால் தான் நினைத்தது கைகூடும் என்று அவனுக்குத் தெரியவில்லை. தான் எதற்கும் இலாயக்கில்லை என்று எண்ணத் தொடங்குகிறான். அப்போது தான் அவனை கவலை தொற்றிக் கொள்கிறது!
இரண்டு: மற்றவர்களோடு பழகுவது எப்படி என்பது புரியாத போது.
கவலைக்கு இன்னொரு காரணம் அவன் மற்றவர்களோடு பழகும் போது ஏற்படுகின்றது. ஏதோ ஒரு தேவைக்காக மற்ற ஒருவனை அணுகுகின்றான். அதை அவன் மறுத்து விடுகின்றான். இவன் அவனை விட்டு விலகி விடுகின்றான். தொடர்பை முறித்துக் கொள்கின்றான். மறு படி அவன் வந்து “சமாதானம்” பேசினாலும் அதனை இவன் ஏற்பதில்லை. அவன் எதிரே வந்தாலும் தலையைத் திருப்பிக் கொண்டு விலகிச் சென்று விடுகின்றான். இப்படியாக அவன் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்கின்றான். விளைவு: கவலை!!!
இப்படிப்பட்ட இரண்டு சூழ்நிலைகளில் இருந்தும் இத்தகைய சிறுவர்களைக் காப்பாற்றிட வேண்டியது யார் பொறுப்பு?
பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு இதில் நீங்காப் பொறுப்பு இருக்கிறது என்கிறார்கள் வல்லுனர்கள்.
சோக வயப்பட்ட குழந்தைகள் – படிப்பில் கவனம் செலுத்திட இயலாது! இப்படிப்பட்ட குழந்தைகள் பள்ளியிலிருந்து இடையிலேயே நின்று விடும் நிலையும் (drop out) ஏற்பட்டு விடுகிறது.
எனவே – ஆசிரியர்கள் அன்றாடம் நடத்துகின்ற பாடங்களோடு சேர்த்து – தோல்வியைச் சந்திப்பது எப்படி என்றும், அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நடப்பது எப்படி என்றும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்திட வேண்டும். (மேலை நாடுகளில் சில பள்ளிகளில் இவ்வாறு சொல்லிக் கொடுக்கத் தொடங்கி விட்டனர்).
அடுத்து பெற்றோர்கள்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் காட்டினால்? தந்தை எப்போதும் வேலை வேலை என்று தனது தொழிலில் பிஸியாக இருந்து விட்டால்? தாய்க்கு தன் பிள்ளைகளைப் புரிந்து கொள்ளத் தெரியவில்லை என்றால்? கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்தால்? கணவனும் மனைவியும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டிருந்தால்……..? என்னவாகும் குழந்தைகள்?
குழந்தைகளின் கவலைகளை நீக்கிடப் போதுமான விழிப்புணர்வு இன்னும் ஏற்படாத காரணத்தினால் தான் உலக அளவில், சோகத்துக்கு ஆளாகின்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றதாம். இதற்கு வழி ஒன்றை நாம் கண்டே ஆக வேண்டும் தானே!
குழந்தைகளின் கவலைகளைப் போக்கிட இஸ்லாம் என்ன தீர்வு தருகின்றது?
ஒன்று:
மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்வை இறைவன் கற்றுத் தருகின்றான். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருந்திட வேண்டும் எனில் பெற்றவர்கள் முதலில் மகிழ்ச்சியாக இருந்திட வேண்டும்.
இரண்டு:
போதும் என்ற மனப்பான்மையுடன் வாழ்ந்திடக் கற்றுத் தருகின்றான் இறைவன். பொருள்களை வாங்கி வாங்கிக் குவிப்பதில் மகிழ்ச்சி இல்லை என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்குப் புரிய வைத்திட வேண்டும்.
மூன்று:
மற்றவர்களுடன் மகிழ்ச்சியோடு பழகுவது எப்படி என்று கற்றுத் தருகின்றான் இறைவன். சிரித்த முகத்தோடு அணுகுவது, கை குலுக்குவது, சலாம் சொல்வது, அன்பளிப்புகளைப் பகிர்ந்து கொள்வது, மற்றவர்களுக்கு முன்னுரிமை தருவது, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, மன்னிக்கும் மனப்பான்மை, வீணான சந்தேகங்களைத் தவிர்த்தல், கோள் சொல்லாமை, மற்றவர்க்கு உதவி செய்தல் மற்றும் துஆ செய்தல் – இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
மற்றவர்களோடு பழகுவது எப்படி என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் கற்றுத் தந்திட வேண்டும். பெற்றோர்களின் முன்மாதிரியை அப்படியே பின்பற்றுவார்கள் என்பதால், பெற்றோர்கள் மற்றவர்களுடன் இனிமையாகப் பழகுவதை வழக்கமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும் அதற்குத் தக நடந்து கொள்வது எப்படி என்பதையும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குப் புரிய வைத்திட வேண்டும்.
குழந்தைகள் கவலை தோய்ந்தவர்களாக ஆவதிலிருந்து காப்பதே சாலச் சிறந்தது. ஏனெனில் ஒரு முறை அவர்கள் சோக வயப் பட்டு விட்டால், காலம் முழுவதும் அது தொடருமாம்!
குழந்தைகளை மகிழ்ச்சியுடன் வைத்திருத்தல் சமூகக் கடமை. ஏனெனில் அவர்களே எதிர்கால சமூகத்தின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கப் போகிறவர்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது!

பதற்றம் தவிர்! வெற்றி நிச்சயம்!


பதற்றம்! ஆங்கிலத்தில் இதனை Anxiety என்று குறிப்பிடுகின்றார்கள். அடுத்து என்ன நடந்திடுமோ என்ற பயம் கலந்த அச்சம். இது ஒரு மனித பலவீனம். இதனை நாம் வென்றாக வேண்டும்.

தனி மனித வாழ்விலும் சரி, குடும்ப வாழ்விலும் சரி, தொழில் துறை அல்லது பணியிடம் ஆனாலும் சரி, தொண்டனாக இருக்கும் போதும் சரி, தலைவர் பொறுப்பில் இருக்கும் போதும் சரி – இந்த பதற்றம் கூடவே கூடாது.

ஏனெனில் – பதற்றம் – நமது செயல் திறனை பாதிக்கும் (performance).

பதற்றம் – நமது முடிவெடுக்கும் திறனை பாதிக்கும் (interferes decision making).

பதற்றம் – எந்த ஒன்றிலும் நமது கவனத்தைக் குவித்திட இயலாமல் தடுக்கும் (shatters concentration).

எந்த ஒரு செயலையும் நாம் அழகே செய்து முடித்திட நிதானம் தேவை. அவசரம் கூடாது. பதற்றம் எந்த ஒரு காரியத்தையும் கெடுத்து விடும். பதறாத காரியம் சிதறாது என்பது முதுமொழி.

சாதாரண சூழலில் யாரும் பதற்றம் அடைய மாட்டார்கள் தான். ஆனால் சில அழுத்தம் தரும் சூழல்கள் (stressful situations) பதற்றத்தைக் கொண்டு வரலாம். அந்த சமயங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதே நமது ஆளுமையை (personality) நிர்ணயிக்கும்.

இதோ பதற்றம் வரவழைக்கும் சூழல்களில் சில:

மாணவர்கள் தேர்வு எழுதும் முன்பு.

ஏதேனும் அவசியமான பொருள் ஒன்று அவசியமான நேரத்தில் தொலைந்து விட்டால்.

அவசிய வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் போது Traffic jam ஏற்பட்டால்.

புதிதாக ஒரு இடத்துக்குச் சென்றிருக்கும் போது.

முற்றிலும் புதிதான மனிதர்கள் (strangers) இருக்கும் இடத்தில்.

சொற்பொழிவுக்கு முன்னர்.

நேர்முகத் தேர்வுக்கு முன்னர் – நேர்முகத் தேர்வின் போது.

சரி, இப்படிப்பட்ட தருணங்களில் பதற்றம் தவிர்க்க என்ன வழி?

ஆசுவாசப் படுத்துதல் – Relaxation!

நன்றாக மூச்சை இழுத்து விடுதல்.

நகைச்சுவை உணர்வை வரவழைத்துக் கொள்ளுதல்.

“நல்லதே நடக்கும்” என்ற சிந்தனையை வலிந்து நினைத்தல்.

எது நம் கைகளில் இல்லையோ அது குறித்து கவலைப் படுவதைத் தவிர்த்தல்.

எது நம் கைகளில் உள்ளதோ அது குறித்து ஆகக் கூடிய காரியத்தில் இறங்குதல்.

இறைவன் மீது நம்பிக்கை (தவக்குல்) வைத்தல். துஆ செய்தல்.

சரி, பதற்றமான சூழல்களில் அண்ணலார் (ஸல்) அவர்களின் முன்மாதிரி எப்படி என்று பார்ப்போமா?

பத்ர் போருக்கு முன். நபியவர்கள் பதற்றப் பட்டார்களா? இல்லையே! ஏன்? எந்த ஒரு போரின் போதும் சரி நபியவர்கள் பதற்றப்பட்டதே கிடையாது.

அரபுலகம் முழுவதுமே திரண்டு வந்து மதீனாவை முற்றுகையிட்டு அழித்திட வந்த அகழ் யுத்தத்தின் போதும் நபியவர்கள் பதற்றம் அடைந்திடவில்லை. நபித்தோழர்களும் பதற்றம் அடைந்திடவில்லை.

அவ்விடத்தில் முஃமின்கள் (பெருஞ்) சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, இன்னும் கடுமையான அதிர்ச்சியினால் அதிர்ச்சிக்கப்பட்டார்கள். (33: 11)

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. அன்றியும், முஃமின்கள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது, “இது தான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்” என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய ஈமானையும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தாமல் இல்லை. (33: 21 – 22)

பொதுவாகச் சொல்வதென்றால் – எல்லா இறைத்தூதர்களின் வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட சூழல்கள் நிறைந்தே காணப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழல்களில் வைத்துத் தான் அல்லாஹு தஆலா இறைத்தூதர்களுக்கும் இறை நம்பிக்கை கொண்ட அந்த நபித் தோழர்களுக்கும் “பயிற்சி” அளித்திருக்கின்றான்.

ஹிஜ்ரத்தின் போது தவ்ர் குகையில் அண்ணலாரும் அபூ பக்ர் சித்தீக் அவர்களும் தங்கியிருந்த சமயம் பதற்றத்திற்குரியது தான். “பயப்பட வேண்டாம்! அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்!” என்றார்கள் நபியவர்கள்.

அதுவெல்லாம் சரி! நாம் எப்படி நிதானத்தைக் கற்றுக் கொள்வது?

தினமும் அதற்குப் பயிற்சி அளிக்கின்றானே அல்லாஹு த ஆலா!

என்ன அது?

ஐந்து வேளை தொழுகையைத் தான் சொல்கின்றேன். அவசரப்படாமல் நிதானமாகத் தொழுங்கள்!

இன்னும் சொல்லப்போனால் – உளூவை நிதானமாகச் செய்யுங்கள்.

பள்ளிக்கு நிதானமாக கம்பீரத்துடன் நடந்து வாருங்கள். ஓடி வர வேண்டாம் என்பது நபிமொழி.

“தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் ஓடி வராதீர்கள். நடந்தே வாருங்கள். நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். கிடைத்ததைத் தொழுங்கள். தவறியதைப் பூர்த்தி செய்யுங்கள்.” (புஹாரி )

தொழுகையில் நிதானமாக குர் ஆனை நிறுத்தி நிறுத்தி ஓதுங்கள்.
மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக. (73: 4)

தொழுகையின் ஒவ்வொரு நிலையிலிருந்து மறு நிலைக்குச் செல்லும் போது நிதானத்தைக் கடைபிடிக்கவும்.

இவ்வாறு நிதானமாக ஒவ்வொரு நாளும் நாம் பெற்றுக் கொள்கின்ற பயிற்சி, நமது வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் நமக்கு நிச்சயம் உதவும்.

நாம் தான் இரண்டு ரக்அத் தொழுகையை இரண்டு நிமிடங்களில் முடிப்பவர்கள் ஆயிற்றே!

அவசரம் அவசரமாக தொழுது முடிக்கப் படும் தராவிஹ் தொழுகையும் நமக்கு எப்படி பயிற்சியாக அமையும்?

இன்றிலிருந்து நிதானமாகத் தொழுவோம் தானே!

பதற்றம் தவிர்க்க இதுவே சிறந்த வழி! வெற்றிக்கான வழியும் கூட!

நமது பாங்கொலியே இதற்குச் சான்று!

“தொழுகையின் பக்கம் வாருங்கள்! தொழுகையின் பக்கம் வாருங்கள்!
“வெற்றியின் பக்கம் வாருங்கள்! வெற்றியின் பக்கம் வாருங்கள்!

Sunday, November 20, 2011

ஆர்வமுள்ளவர்களே! களம் இறங்குங்கள்!!


எனது நீண்ட நாள் ஆசைகளுள் ஒன்று: நமதூர் இளைஞர்கள் அனைவரும் - " பொருளீட்டுதற்காக குடும்பத்தைப் பிரிந்து பயணம் சென்று விடுகின்ற" - இஸ்லாத்துக்கு ஒவ்வாத கலாச்சாரத்துக்கு முற்றுப் புள்ளி வைப்பதில் முன்னோடிகளாக விளங்கிட வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் கனவு.          

நன்றாகப் படித்து நல்ல திறமைகளை வளர்த்துக் கொண்டு (skilled) குடும்பத்துடன் வெளி நாடு செல்பவர்களைப் பற்றி நான் இங்கே பேசிடவில்லை. 

காலத்துக்கேற்ற திறமைகளை வளர்த்துக் கொள்ளாமல், ஏதோ ஒரு வேலை கிடைத்தால் போதும் என்று வெளி நாட்டுக்குக் கிளம்பி விடுகின்ற நமது இளைஞர்களைப் பற்றியே நமது கவலை எல்லாம். 

இது குறித்து நாம் நிறையப் பேசியிருக்கின்றோம். ஆனால் மாற்றம் கண்ட பாடில்லை. 

எனவே இது குறித்து நமது இளைஞர்களுடன் எமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம். 

பல இளைஞர்களுடன் நாம் பேசும்போது அவர்கள் கேட்பதெல்லாம் - '"இங்கிருந்து கொண்டு என்ன செய்யச் சொல்கிறீர்கள்?"  என்பது தான்! இக்கேள்விக்கு நாம் பதில் கண்டு பிடித்தே ஆக வேண்டும். 

இன்னொன்று: "வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்!" - இதற்கும் நாம் வழி கண்டு பிடித்தாக வேண்டும். 

எனவே நீடூர் சகோதரர்களை நாம் கேட்டுக் கொள்வதெல்லாம் - புதிய தலைமுறைக்கு உங்கள் ஆலோசனைகளை வழங்குங்கள் என்பது தான்.        

இந்த கருத்துப் பரிமாற்றத்துக்கு ஒரு தொடக்கமாக -  

இதோ ஒரு பிஸினஸ் ஐடியா!  

காலையில் எழுந்தவுடன் பெரும்பாலான தாய்மார்களுக்கு இருக்கின்ற பெரிய "வேலை" பள்ளிக்கூடம் செல்கின்ற குழந்தைகளுக்கு மதிய உணவு தயாரித்து "பாக்ஸில்" கட்டித் தருவது தான். 

தாய்மார்களின் இந்தச் சுமையைக் குறைத்திட ஒரு பிஸினஸ் யுத்தி! 

நமதூரிலேயே உணவகம் ஒன்றைத் துவக்குவது தான் அது.  

பள்ளிக் குழந்தைகளின் வார நாட்கள் ஆறிலும் அவர்களுக்கென மதிய உணவுப் பொட்டலங்கள் தயார் செய்து வீட்டுக்கே சென்று (door delivary) வழங்கிடும் ஒரு புதிய யுத்தி. 

அதிகாலையில் எழுந்து பஜ்ர் தொழுது விட்டு உங்கள் பிஸினஸைத் துவக்கிட வேண்டும். 

வெஜிடபிள் பிரைடு ரைஸ், வெஜிடபிள் பிரியாணி, லெமன் ரைஸ், டொமாடோ ரைஸ், என்று நாளொன்றுக்கு ஒரு அயிட்டம். முட்டை வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம். 

சுவை என்றால் அப்படி ஒரு சுவை இருக்க வேண்டும்! 

சுத்தம் என்றால் அப்படி ஒரு சுத்தம் இருந்திட வேண்டும்! உலகத் தரத்தை உள்ளூருக்கே கொண்டு வந்து விட வேண்டும்.  

அலுமினியம் பாக்ஸில் பொட்டலம் செய்து வீட்டுக்கே சென்று டெலிவரி செய்திட வேண்டும். 

ஒரு இருநூறு பொட்டலங்கள் விற்பனையாகும் என்பது எமது கணிப்பு. 

நிகர லாபம் ஒரு பொட்டலத்துக்கு ஐந்து ரூபாய் வையுங்கள். காலை 9 மணிக்குள் ஆயிரம் ரூபாய் சம்பாதித்து விடலாம். 

மனித வள மேம்பாட்டு அறிஞர்கள் சொல்வதெல்லாம் - எந்த ஒன்றில் ஒருவருக்கு ஆர்வம் இருக்கின்றதோ அந்த ஒன்றிலேயே அவர் ஈடுபடுவது தான் அவருக்கு வெற்றியளிக்கும் என்பது தான். 

எனவே நாம் கேட்பதெல்லாம் - 

ஆர்வமுள்ளவர்களே! களம் இறங்குங்கள்!!  

Friday, November 11, 2011

சஹாபிப் பெண்மணியிடம் பாடம் படிப்போமா?

உம்மு ஐமன் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அண்ணல் நபியின் மரணத்தால் கடும் துயரத்திற்கு ஆளானார்கள். மனம் நொந்து அழுது அழுது கடுமையான பலவீனம் ஏற்பட்ட பிறகும் அவர்களின் அழுகை நிற்கவே இல்லை! இதனைக் கேள்விப்பட்டதும் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் வந்து உம்மு ஐமனைத் தேற்றினார்கள்.

அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் இவ்வாறு கூறினார்கள். ''ஏன் இவ்வளவு தூரம் கவலைப்படுகின்றீர்கள்! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறைவனிடத்தில் மிகச் சிறந்த சன்மானங்கள் உள்ளன.'' அதற்கு உம்மு ஐமன் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ''இதுதான் எனக்குத் தெரியுமே! நான் அழுது கொண்டிருப்பது இறைச் செய்தியின் வருகை (வஹீ) நின்று விட்டதே என்பதற்காகத்தான்!'' என்று பதில் அளித்தார்கள். இதனைக் கேட்டதும் அவர்கள் இருவரின் மனமும் இளகியது. அவர்களும் அழலாயினர். - (ஸஹீஹ் முஸ்லிம்)

ஆனால் தபகாத் இப்னு சஃத் எனும் நூலில் இவ்வாறு உள்ளது:- மக்கள் உம்மு ஐமன் ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு ஆறுதல் கூறி மரணம் ஏற்படுவது இயற்கையே எனப் புரியவைத்தபோது, ''இறைவனின் விதிப்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணம் அடைந்தது குறித்து எனக்குத் தெரியும்! இறைச் செய்தியின் வருகை தடைப்பட்டு விட்டதே என்பதற்காகத்தான் நான் அழுகின்றேன்'' என்று பதில் அளித்தார்கள்.

இந்த ஹதீஸில் நமக்கு நிறைய பாடங்கள் இருக்கின்றன:

1. நமது மார்க்கம் - நிறைவு படுத்தப் பட்டு விட்ட மார்க்கமாகும்.

"இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;" (5:3)


2. மறைவான அறிவைப் பெறும் வழி முறை வஹீ மட்டுமே. நபியவர்கள் இறுதித் தூதராக அனுப்பப்பட்டு விட்டதால், அவர்களின் மரணத்துக்குப் பின் - மறைவான அறிவு குறித்து நாம் எந்த ஒன்றையும் பெற்றுக் கொண்டு விட முடியாது.

3. நபியவர்கள் கனவில் வந்து சொன்னார்கள் என்பதையெல்லாம் வைத்து மார்க்கத்தில் புதுமையாக எதனையும் புகுத்தி விட முடியாது. கூடாது.      

Thursday, November 10, 2011

நற்குணங்களும் பங்கிடப் படுபவையே!!


நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கிடையே (ரிஸ்கை) வாழ்வாதாரங்களை பங்கிட்டது போல நற்குணங்களையும் உங்களுக்கிடையே பங்கிட்டுள்ளான்.

நிச்சயமாக அல்லாஹ், இவ்வுலகை தான் நேசிப்பவர்களுக்கும், தான் நேசிக்தவர்களுக்கும் கொடுப்பான். ஆனால் மார்க்கத்தை தான் நேசிக்கின்றவர்களைத் தவிர மற்றெவருக்கும் கொடுக்க மாடடான்.

ஆக எவனுக்கு அல்லாஹ் மார்க்கத்தைக் கொடுத்துள்ளானோ அவனை அல்லாஹ் நேசித்து விட்டான.

எவனின் கைவசம் என் உயிர் உள்ளதோ அவனின் மீது சத்தியமாக ஓர் அடியானின் உள்ளமும் நாவும் முஸ்லிமாகாதவரை அவன் முஸ்லிமாக மாட்டான்.

அவனின் அண்டை வீட்டான் இவனின் "பவாயிக்" கிலிருந்து (அக்கிரமம் மற்றும் அநீதியிருந்து)  நிம்மதி பெறாத வரை அவன் முஸ்லிமாக மாட்டான் என்று நபி சல் அவர்கள் கூறிய போது -

நான் "பவாயிக்" - அழிவுகள் - என்றால் என்ன என்று கேட்டேன். அதற்கவர்கள் அவனின் அக்கிரமமும் அநீதமும் என்றார்கள்.

ஓர் அடியான் ஹராமான முறையில் பொருளைச் சம்பாதித்து செலவு செய்து பரக்கத் பெறுவதும் இல்லை; அதனை தான தர்மம் செய்தால் அது ஏற்றுக் கொள்ளப் படுவதும் இல்லை; அது அவனுக்கு நரகக் கட்டுச் சாதமாக ஆகியே தவிர தன் பின்னால் விட்டுச் செல்ல மாட்டான்.

நிச்சயமாக அல்லாஹ் தீங்கைக் தீங்கைக் கொண்டு அழிக்க மாட்டான். எனினும் தீங்கை நலவைக் கொண்டு அழிப்பான். நிச்சயமாக அசுத்தம் அசுத்தத்தை அழிக்காது - நீக்காது என்று கூறினார்கள்.      

நூல்: அஹ்மது, அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

கேள்வி: நமக்கு அல்லாஹ் வழங்கிய நற்பண்புகள் என்னென்ன என்று சுய பரிசோதனையில் இறங்குவோமா?

இன்றிரவே தொடங்குவோம் அதனை!

Wednesday, November 2, 2011

தலைமைத்துவமும் மனித வளங்களும்!


தலைமைத்துவத் திறன் என்பது ஒருவனது மனித வளங்களைப் பொறுத்ததே என்பதை முன்னரே சொன்னோம் அல்லவா? அது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
மனித வளங்களில் ஐந்து வகைகள் உண்டு:
அவை:
அறிவு வளம் (intellectual resources)
ஆன்மிக வளம் (spiritual resources)
மன வளம் ( psychological resources)
ஒழுக்க வளம் (ethical resources)
உடல் வளம் (physical resources)
இந்த ஐந்து விதமான வளங்களையும் எந்த அளவுக்கு ஒருவன் வளர்த்துக் கொள்கின்றானோ அந்த அளவுக்கே ஒரு மனிதனின் தலைமைத்துவத் திறன் (leadership capacity) அமைந்திருக்கும் என்றால் அது மிகையில்லை.
தலைமைத்துவம் என்பது என்ன?
தலைமைத்துவம் என்பது பொறுப்புணர்ச்சியைக் குறிக்கும்.
தலைமைத்துவம் என்பது வழி காட்டும் திறனைக் குறிக்கும் என்பது திருமறைக் கருத்து.
“இன்னும் அவர்கள் பொறுமையுடனிருந்து, நம் வசனங்களை உறுதியாக நம்பி ஏற்றுக் கொண்ட போது, நம்முடைய கட்டளைப்படி நேர்வழி காட்டும் தலைவர்களை – இமாம்களை – அவர்களில் நின்றும் உண்டாக்கினோம்.” (32: 24)
தலைமைத்துவம் என்பது ஒருவர் தனது கருத்துக்களை முன் வைத்து மக்களுக்கு மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் (leadership is the capacity to influence) என்று சொல்லலாம்.
தலைமைத்துவம் என்பது இரண்டு திறன்களைக் கொண்டது என்பாரும் உண்டு:
முடிவெடுக்கும் திறன் (Decision making skill)
சிக்கல்களைத் தீர்க்கும் திறன் (Problem solving skill)
தலைமைத்துவம் என்பது சில அடிப்படையான பண்புகளைக் கொண்டது என்றும் சொல்லலாம். இதனையே தலைமைத்துவப் பண்புகள் (leadership qualtiies) என்று சொல்கிறார்கள்.
இப்படி தலைமைத்துவம் என்றால் இவ்வனைத்தும் ஒன்று சேர்ந்தது தான் எனும் போது – நாம் மேலே சொன்ன மனித வளங்களுக்கும் தலைமைத்துவத்துக்கும் உள்ள தொடர்பு புரியும்.
ஆன்மிக வளம் அற்றவர்கள் தலைமைக்குப் பொறுத்தமானவர்கள் அன்று! இதற்கு இன்றைய தலைவர்களே சான்று.
மக்களுக்கு வழி காட்டிட அறிவு வளம் அவசியம்; அஃது இல்லாதவர்கள் தலைமைப் பொறுப்புக்கு வந்ததனால் தான் புதிய தலைமுறை வழி கேட்டில் சென்று கொண்டிருக்கிறது.
நற்குணம் அற்றவர்கள் தலைமைக்கு வந்து விட்டால் அவர்கள் பொறுப்புடனே நடந்து கொள்வதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லை.
மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதவர்கள் தலைவர்கள் ஆனால் – அவர்கள் “எதை வேண்டுமானாலும் செய்வார்கள்”. எனவே தான் நமது தலைவர்களின் பலர் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார்கள்.
ஆனால் நாம் இங்கே பேசுவது அரசியல் தலைவர்களைப் பற்றி அல்ல!
ஏனெனில் இஸ்லாத்தைப் பொறுத்தவரை – நம்மில் ஒவ்வொருவரும் பொறுப்பு மிக்கவர்களே – எனும் அடிப்படையில் நாம் ஒவ்வொருவரும் தலைவர்களே!
எனவே நாம் பேசுவது எப்படிப் பட்ட தலைமை பற்றி என்றால் -
கணவனை ஒரு தலைவனாக; மனைவி ஒரு தலைவியாக பார்க்க இருக்கிறோம்.
தந்தையை ஒரு தலைவனாக; தாயை ஒரு தலைவியாக பார்க்க இருக்கிறோம்.
ஆசிரியரை ஒரு தலைவனாக; ஒரு முதலாளியை ஒரு தலைவனாக; ஒரு தொழிலாளியை ஒரு தலைவனாக பார்க்க இருக்கின்றோம்.
ஒரு நிறுவனத்தின் தலைமை பற்றியும், மக்களுக்கு “வழி காட்டும்” அறிவுடையோர் தலைமை பற்றியும் கூட கூட நாம் ஆய்வு செய்திட இருக்கின்றோம் – இன்ஷா அல்லாஹ்!

மனித வள மேம்பாடு எதற்காக?


மனித வளங்களை நாம் ஐந்து விதங்களாக பிரித்து ஆய்வு செய்து வருகிறோம் அல்லவா?
இனி மனித வள மேம்பாட்டின் அவசியம் குறித்து நாம் சிறிது கவனம் செலுத்துவோம்.
ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் வெற்றி பெறவே விரும்புகின்றான்.
ஒரு மனிதனின் மனித வளங்கள் எந்த அளவுக்கு வளர்க்கப் படுகின்றதோ, அந்த அளவுக்குத் தான் அவனது வாழ்க்கை வெற்றியின் (life success) ஆழ அகலம் அமைந்திருக்கும் என்றால் அது மிகையில்லை!
அது போலவே – மனிதன் தனது ஐந்து விதமான வளங்களையும் எந்த அளவுக்கு வளர்த்துக் கொள்கின்றானோ அந்த அளவை வைத்தே ஒரு மனிதனின் வாழ்க்கை இலக்கினை (life goal) தீர்மானிக்க இயலும்.
ஒரு மனிதன் இவ்வுலகுக்கு அளிக்கின்ற பங்களிப்பு (contribution) என்பதும் அவனது மனித வளங்கள் எந்த அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளதோ அந்த அளவைப் பொறுத்ததே.
தலைமைத்துவம் பற்றி நிறைய பேசுகிறாம். ஆனால் அந்தத் தலைமைத்துவத் திறன் என்பது ஒருவனது மனித வளங்களைப் பொறுத்ததே!
இன்று உலக மக்களை வாட்டிக் கொண்டிருக்கும் மிகப் பெரிய நோய்களில் பெரும்பாலானவை, மனிதனின் மனம் சம்பத்தப் பட்டவையே.  மனிதனின் மன வளங்கள் (psychological resources)  வளர்க்கப் பட்டாலே ஒழிய இப்பிரச்னைகளுக்குத் தீர்வு காணல் சாத்தியம் இல்லை!
மனித வளங்கள் வளர்க்கப் பட்டால் தான் மனித உறவுகள் (human relations) சீரடையும்.  அது குடும்பத்துக்கு உள்ளே உள்ள உறவாக இருந்தாலும் சரி, குடும்பத்துக்கு வெளீயே உள்ள உறவாக இருந்தாலும் சரி!
இன்னும் சொல்லப் போனால் – இன்றைய உலகின் எல்லாப் பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு – மனித வள மேம்பாடே என்றால் அதனை மறுப்பார் எவரும் உண்டா?