கண் குளிர்ச்சி எப்போது? Qurrata ayn

 கண் குளிர்ச்சி எப்போது?

“எங்கள் இறைவா! எங்கள் துணைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து கண்களின் குளிர்ச்சியை எங்களுக்கு அளிப்பாயாக!” - என்று அல்லாஹ்வின் நல்லடியார்கள் பிரார்த்தனை செய்வார்கள் (குர்ஆன் 25:74 - பகுதி)

கண் குளிர்ச்சி என்பதை ஷெய்ஃக் காலித் அபூ அல் ஃபள்ல் அவர்கள் - Epitome of peace - நிம்மதியின் உச்சம் என்கிறார்கள்!  

துணைவியரிடமிருந்தும், குழந்தைகளிடமிருந்தும் அந்தக் கண் குளிர்ச்சி எப்போது கிடைக்கும்?  எவ்வாறு கிடைக்கும்?

அது சில நிபந்தனைகளுக்குட்பட்டது! (Qurrata ‘ayn is conditional) என்கிறார்கள் ஷெய்ஃக் அவர்கள்.

கணவன் அக்கறையற்றவனாக; காதலும் அன்பும் அற்றவனாக; அருகிலிருந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளாதவனாக; சுயநலம் பிடித்தவனாக; சுயநல வெறி கொண்டவனாக (narcissistic); அதட்டி அதிகாரம் செய்பவனாக; கட்டுப்படுத்துபவனாக; தேவையான சமயங்களில் நழுவி ஓடிவிடக் கூடியவனாக; துணையின் உணர்வுகளை அலட்சியம் செய்பவனாக; உளவியல் ரீதியாக துன்புறுத்துபவனாக (abusive) இருந்தால்…

அவனுக்கு எப்படி கண் குளிர்ச்சி கிடைக்கும் - துணையிடமிருந்தும், குழந்தைகளிடமிருந்தும்? 

நிம்மதியும், ஆறுதலும் எப்படிப்பட்ட கணவனுக்குக் கிடைக்கும் என்றால் - மிக மிகக் கண்ணியமானவாக (a very very decent human being); உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவனாக; அன்பு செலுத்துபவனாக; அக்கறையுள்ளவனாக; அவசியமான நேரங்களில் அருகில் இருப்பவனாக; துணையின் நிலையிலிருந்து அவரைப் புரிந்து கொள்பவனாக (empathic) - விளங்குகின்ற கணவன்களுக்கு மட்டுமே கண் குளிர்ச்சியும், நிம்மதியும், அமைதியும் கிடைக்கும் என்கிறார்கள் ஷெய்ஃக் அவர்கள்!

இப்படிப்பட்ட வாழ்க்கைத் துணை எப்படி நமக்குக் கிடைக்குமெனில் - நம் திருமணத்தின் அளவுகோல் (criteria) என்பது - அல்லாஹு தஆலாவை முன்னிறுத்தி செய்யப்படுவதாக இருந்தால் மட்டும் தான் - அது கிடைக்கும்!

அல்லாது, உடற் கவர்ச்சியினாலோ; உள்ளீடற்ற காதலினாலோ உன் திருமணத்தை முடிவு செய்து விட்டால் - நீ எதனை விரும்பினாயோ - அதனை மட்டுமே இறைவன் உனக்கு வழங்குவான் - என்கிறார்கள் ஷெய்ஃக் அவர்கள்! 

கண் குளிர்ச்சிக்கு அங்கே இடமே இல்லையாம்!

by Counselor Mansoor 

Comments